சோழ மன்னனான நந்தசோழன் குழந்தைப்பேறு இன்றி வருந்தினான். திருமால் தனது பக்தனின் வருத்தத்தைப் போக்க திருவுளம் கொண்டார். ஒருநாள் மன்னன் வேட்டைக்குச் சென்றபோது, அங்கிருந்த குளத்தின் தாமரை மலரில் திருமகளைக் குழந்தையாக அவதரிக்கச் செய்தார். தாமரை மலரில் இருந்து கண்டெடுத்ததால் குழந்தைக்கு 'கமலவல்லி' என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். கமலவல்லி, அரங்கன்மீது காதல் கொண்டு விரதம் மேற்கொண்டார். அரங்கன் உறையூருக்கு எழுந்தருளி நாச்சியாரைத் திருமணம் புரிந்துக் கொண்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது. கோழி ஒன்று யானையைத் துரத்தியடித்ததால் 'திருக்கோழி' என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் அழகிய மணவாளப் பெருமாள் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், வடக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் கமலவல்லி நாச்சியார், உறையூர் வல்லி என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றார். ரவிதர்மா, 33 கோடி தேவர்கள் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
தாயாருக்குத் தனி சன்னதி இல்லை. பெருமாள் அருகிலேயே தாயார் வீற்றிருக்கின்றார். ஆண்டுதோறும் பங்குனி உத்தரத்திற்கு முதல்நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் உறையூருக்கு எழுந்தருளுகிறார். கமலவல்லி நாச்சியாருடன் திருக்கல்யாண உத்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. திருப்பாணாழ்வாரின் அவதார ஸ்தலம். ஆழ்வாருக்குத் தனி சன்னதி உள்ளது.
திருமங்கையாழ்வார் 1 பாசுரமும், குலசேகராழ்வார் 1 பாசுரமுமாக மொத்தம் 2 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|